Thursday, June 9, 2011

ஒரு மாலைப் பொழுதில்....


ஒரு மாலைப் பொழுதில்....

(எப்போதோ துணைப்பாடத்தில் இடம் பெற்ற யாரோ எழுதிய ஒரு கதையை நான் செய்த மொழிபெயர்ப்பு)

"மிஸ்டர் ஜான், எனது அத்தை சிறிது நேரத்தில் வந்துவிடுவாள்" என்றாள், அந்த மிக அமைதியான நடத்தை கொண்டவளாய்த் தெரிந்த அந்த பதினைந்து வயதுப் பெண். "அது வரை எனது நச்சரிப்பை பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும்." ஜான் அவளை ஒருவித சங்கடத்துடன் பார்த்தான். அவளை சந்தோஷிக்க ஏதோ சொல்ல முயற்சித்து தோல்வியடைந்த சங்கடம். 

அவன் இப்போது தனது நரம்பு உபாதைக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வந்துள்ளான். இம்மாதிரி முன்பின் தெரியாத வைத்தியர்களை பார்ப்பது அவனுக்கு இப்பொதெல்லாம் மிக சகஜமாகிவிட்டது. இதில் அவனுக்கு நம்பிக்கையில்லாவிடினும், ஏதோவொரு உந்துதலில் செய்து வந்தான். அவனது சகோதரி இந்நோயினை அனுபத்திராதவளெனினும் இதன் உபாதைகளை நன்றாக உணர்ந்தவள். தனக்குத் தெரிந்த சில வைத்தியர்களின் விலாசமிட்ட அறிமுகக் கடிதங்களுடன் அவனை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தவள் அவள்தான்.

அவனுக்கு தனக்கு வைத்தியம் செய்யவிருக்கும் மாது திறமையானவள்தானா என்று நிச்சயமாக தெரிந்திருக்கவில்லை. அமைதியும் சந்தோஷமும் இல்லாத ஒரு மன நிலையில் அவன் அங்கு அமர்ந்திருந்தான். "உங்களுக்கு இந்த சுற்றுவட்டாரத்தில் நிறையப் பேரைத் தெரியுமா?" தாங்களிருவரும் போதுமான அளவிற்கு மௌனமாக இருந்தாகிவிட்டதாக நினைத்த அவ்விளம்பெண் கேட்டாள். "மிகக் குறைவு" என்றான், "நான்கு வருடத்திற்கு முன் என்னுடைய சகோதரி இங்கு இருந்தாள். அவளுக்கு பரிச்சயம் உண்டு. என்னை இங்கு அனுப்பி வைத்தவளே அவள்தான்." அவன் அந்த கடைசி வாக்கியத்தை மிக வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான்.

"அப்ப என்னுடைய அத்தையை பற்றி உங்களுக்கு தெரியாது இல்லையா?" என்று தொடர்ந்தாள் அந்த அமைதியான இளம்பெண். "எனக்கு தெரிந்ததெல்லாம் அவளுடைய பெயரும் விலாசமும் மட்டுமே" என்று ஒத்துக் கொண்டான். அந்த மாதுவிற்கு கல்யாணாமகிவிட்டதா என்று தெரிந்துகொள்ள உள்ளூர ஆவலாயிருந்தான், கல்யாணம் ஆகியிருக்கலாம்,.

"மூன்று வருடங்களுக்கு முன்தான் அவளுக்கு அந்த மிக துக்ககரமான சம்பவம் நடந்தது" என்றாள் அந்த பெண். "அதாவது உங்களது சகோதரி இங்கிருந்து போனபிறகு". "துக்ககரமான சம்பவம்...?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஜான். அந்த அமைதியான அழகிய கிராமத்தில் துக்கம் என்பதே கிடையாது போலிருந்தது. 

"நாங்கள் ஏன் அந்த ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம்!" என்றாள் அங்கிருந்த கதவு போலிருந்த ஜன்னலை சுட்டிக் காட்டி. "சிறிது குளிர்ச்சிக்காக இருக்கலாம்" என்றான் ஜான். "ஆனால் இந்த ஜன்னலுக்கும் உங்கள் அத்தையின் துயரத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று வினவினான்.

"மிகச் சரியாக மூன்று வருடங்களுக்கு முன் இந்த ஜன்னல் வழியாகத்தான் என் அத்தையின் கணவரும் அவளது இரு சகோதரர்களும் பறவைகளை வேட்டையாடுவதற்காகப் போனார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. போகும் வழியில் அவர்கள் ஒரு சதுப்பு நிலத்தில் மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த நேரம் மிக கொடுமையான மழைகாலம், மற்ற காலங்களில் பத்திரமாக இருக்கும் இடங்களெல்லாம் அப்பொழுது அபாயகரமானதாகிவிடும், அவர்களுடைய உடல்கள்கூட எங்களுக்கு கிடைக்கவில்லை." அப்பெண்ணின் குரல் தன்னுடைய வழக்கமான அமைதியை இழந்து கம்மியது. "என்னுடைய அத்தை, அவர்களும், அவர்கள் செய்வது மாதிரியே அந்த ஜன்னலை கடந்து அவர்களுடன் சென்ற அவர்களது நாயும், எப்பொழுதாவது திரும்பி வருவார்கள் என்று நம்பிக் கொன்டிருக்கிறாள். அதனால்தான் அந்த ஜன்னல் சாயுங்கால வேளைகளில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அன்பான பரிதாபத்துக்குரிய அத்தை என்னிடம் அடிக்கடி சொல்லுவாள் அவர்கள் எப்படி ஜன்னல் வழியாகப் போனார்கள் என்று. அவளது கணவன் ஒரு வெள்ளை மேலுடையை தோள் மேல் போட்டுக் கொண்டிருந்தான். அவளது கடைசி சகோதரன் அவளை எப்பொழுதும் கேலி பண்ணுவதற்காகப் பாடும் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். அவர்களது பழுப்பு நிற முடிகளடர்ந்த சிறிய நாய் அவர்கள் பின்னால் போய்க்கொண்டிருந்தது". "உங்களுக்குத் தெரியுமா? நான் சில மாலை நேர வேளைகளில் அந்த நான்கு பேரும் இந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைவது போல் உணர்வது உண்டு..." அவள் ஆழ்ந்த பெருமூச்சுடன் நிறுத்தினாள். 

சிறிது நேரத்தில் அம்மாது மிகுந்த சுறுசுறுப்புடன் உள்ளே நுழைந்தாள்.  தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். "லீனா உங்களுக்கு நல்ல துணையாக இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன்" என்றாள். "ஆம், உண்மையிலேயே நல்ல துணைதான்" என்றான் ஜான்.

:நீங்கள் இந்த திறந்திருக்கும் ஜன்னலை பெரிதாக நினைக்கமாட்டீர்கள் என்று நினைகிறேன்" என்று உற்சாகமாகக் கேட்டாள் அம்மாது, "என்னுடைய கணவரும், சகோதரர்களும் பறவைகளை வேட்டியாடிவிட்டு இந்த ஜன்னல் வழியாகத்தான் வருவார்கள். இன்றைக்கு சதுப்பு நிலங்களுக்கு அருகில்தான் வேட்டையாட போயிருக்கிறார்கள். அதனால் எனது அழகிய கம்பளங்களை அவர்கள் பாழ்படுத்தப் போகிறார்கள். நீங்கள் எல்லோரும் அப்படித்தான் செய்வீர்கள்".

அவள் வேட்டையாடுதலை பற்றியும், பறவைகளைப் பற்றியும், குளிர்காலத்தில் அதிகமான பறவைகள் கிடைப்பது பற்றியும் மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனாள். ஜானுக்கு எல்லாமே மிகுந்த அச்சத்தைத் தந்தது. அவன் வேறொரு விஷயத்திற்கு பேச்சை மாற்ற மிகவும் முயற்ச்சித்தான். அவனால் முழுவதும் வெற்றியடைய முடியவில்லை. அம்மாது தன் மீது முழுவதும் கவனம் செலுத்தவில்லை என்பதையும், அடிக்கடி அவளது பார்வை அந்த ஜன்னலருகிலேயே செல்லுவதையும் அவன் நன்றாக உணர்ந்தான். இந்த துக்ககரமான நாளில் அவன் வந்தது அவனுடையே துரதிர்ஷ்டமே என்று நினைத்துக் கொண்டான். "எல்லா வைத்தியர்களுமே நான் முழு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்கிறார்கள். எவ்வேலையும் செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால் உணவு முறைகளில் மட்டும் வேறு வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள்", என்றான் ஜான். அவள், அவனை அசுவராஸ்யமாகப் பார்த்துக்கொண்டே தலையாட்டினாள்.

திடீரென்று அவளுடைய முகம் பிரகாசமாகியது. ஜன்னலின் வழியாகப் பார்த்துக்கொண்டே," அதோ! அவர்கள் வந்துவிட்டார்கள்!" என்று கூவினாள். "சரியாக தேநீர் வேளை முடிவதற்குள் வந்துவிட்டார்கள். அவர்கள் முகம் வரை சேறு படிந்திருப்பது போல் தோன்றவில்லை?" என்றாள்.

ஜான் அங்கு நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம், பார்வையாலேயே அம்மாதுவின் மீது கொண்ட பரிதாபத்தைக் காட்டினான். அப்பெண்ணோ திகிலுடன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்தவனாக ஜான் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் பார்த்தான். இருட்டிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் மூன்று உருவங்கள் ஜன்னலை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதில் ஓர் உருவம் ஒரு வெள்ளை மேலாடையை தோளின் மேல் போட்டுக் கொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த ஒரு பழுப்பு நாயும் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தது. சத்தமிலாமல் அவர்கள் ஜன்னலுக்கு மிக சமீபத்தில் வந்தனர். அப்பொழுது அந்த அரையிருட்டில் ஓர் இளமையான குரல் மெலிதாக பாடுவது கேட்டது.

ஜான் சரேலென்று தன்னுடைய தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு வேகமாக முன் கதவு வழியாக ஓடலானான். நிறுத்தி வைத்திருந்த தன் சைக்கிளிலேறி வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.

"இதோ வந்துவிட்டோம்! என் அன்பே!" என்றான் அந்த வெள்ளை மேலுடை மனிதன். ஜன்னலின் வழியே உள்ளே வந்துகொண்டே "ஓரளவு சேறு படிந்துள்ளது. ஆனால் எல்லாம் காய்ந்துவிட்டது" என்றான். "யார் அப்படி ஓடியது."

"மிகவும் அசாதரணமான மனிதன். அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவனுடைய வியாதியைப் பற்றித்தான். நன்றிகூட சொல்லாமல் ஓடியிருக்கிறான், ஏதோ பேயைக் கண்டது போல" என்று அதிசயித்தாள் அம்மாது.

"அவன் இப்படி ஓடியதற்குக் காரணம் நம்முடைய நாய்தான் என்று நினைக்கிறேன்" என்றாள் அவ்விளம்பெண் மிகவும் அமைதியாக. "அவன் நாய்களைக் கண்டால் தனக்கு மிகவும் பயம் என்று கூறினான். ஒரு முறை இந்தியாவில் எங்கோ ஒரு பகுதியில் ஒரு இடுகாட்டில் பல கொடிய நாய்கள் தன்னை துரத்தியதாகவும், ஒரிரவு முழுவதும் அவ்வாறு கழித்ததாகவும் என்னிடம் கூறினான்" என்றாள் அந்தப் பெண். ஆம்! அந்த பெண் கதை கட்டுவதில் மிகவும் சாமர்த்தியசாலியாகத்தான் இருந்தாள்.