Sunday, February 6, 2011

எச்.ஆர்.டியில் ஒரு காலா 1, ஜனவரி 26


எச்.ஆர்.டியில் ஒரு காலா 1

அலுவல்களை முடித்துவிட்டு, மதியம் லஞ்சை கம்பெனி கேண்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது ஒரு ப்ரோக்ராம் பக். எப்படி டீபக் செய்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது எச்.ஆர். மானேஜர் ஸ்ரீராம் எனதருகில் வந்து அமர்ந்தார். "என்ன ஸ்ரீராம், வேலையெல்லாம் ஆச்சா?" என்றேன். ஸ்ரீராம் எனக்கு நல்ல பழக்கம். அடிக்கடி இப்படி சேர்ந்து லஞ்ச் சாப்பிடுவது வழக்கம். "எங்கே சார், வேலை அது எங்கே முடியப் போகுது" என்று அலுத்துக் கொண்டார்.

"ஹ்ம், என் கதை அதைவிட சோகம் ஸ்ரீராம். ஒரெயொரு ப்ரோக்ராம், ஒரெயொரு பக். கிடந்து சோதிக்குது. டெட்லைனை தாண்டியாச்சு. க்ளையண்ட் கால் மேல் கால் போட்றார். இப்ப ஆச்சா, இப்ப ஆச்சான்னு" என்றேன். "நீங்க ஒரு பக் பத்தி இப்படி அலட்டிக்கிறீங்க. எங்க டிபார்ட்மெண்ட்ல எத்தனை பக்குகள் தெரியுமா?" என்றார் ஸ்ரீராம். எனது பக் பத்தி ஸ்ரீராம் அவ்வளவு எளிதாக சொன்னதும் எனக்கு பக்கென்றாகிவிட்டது. "என்ன ஸ்ரீராம், இப்படி ஈஸியா சொல்லிட்டீங்க. ஒரெயொரு பக். டெட்லைன் தாண்டிருச்சு. டெட்லைன் தாண்டுன்னா க்ளையன்ட்ல இருந்து வி.பி.வரைக்கும் விட்டு ராவிருவாங்க" என்றேன்.

இது மாதிரி வாக்குவாதம் எங்களுக்குள் அடிக்கடி நடக்கும். அவர்கள் வேலை கஷ்டமா இல்லை எங்கள் வேலை கஷ்டமா என்று. எச்.ஆர். டிபார்ட்மென்ட் ஒரு சொதப்பல் டிபார்ட்மென்ட் என்பது எங்கள் கருத்து. வெறும் கீபோர்டை தட்டற வேலைக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்பது அவர்கள் வாதம். இன்று ஸ்ரீராமிற்கு என்ன உளைச்சலோ தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே சத்தமிட்டுவிட்டார். "ஒரு நாள் எங்க டிபார்ட்மென்டல வந்து உக்கார்ந்து பாருங்க சார். உங்க வேலை பெரிசா, எங்க வேலை பெரிசா என்று தெரியும்" என்று ஓபனாகவே சேலஞ்ச் செய்தார். நானும் விடவில்லை. ISO9000 சர்டிஃபிகேஷனில் உள்ள எல்லா டெர்ம்களையும் எடுத்து விட்டு, இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ப்ரோக்ராம் சிஸ்டத்துக்குள் நுழைவது எவ்வளவு கஷ்டம் என்பது பற்றி நான் எனது பங்கிற்கு கத்தினேன்.

வாக்கு வாதம் முற்றி, கடைசியில் எங்களுக்குள் ஒரு உடன்படிக்கையானது. ஒரு நாள் நான் அவர் டிபார்ட்மென்டில் உட்கார்ந்து அவர் வேலை செய்வதை கவனிக்க வேண்டியது. ஒரு நாள் அவர் எனது வேலைசெய்யுமிடத்தில் அமர்ந்து நான் வேலை செய்வதை கவனிக்க வேண்டியது. பின்னர் யாருடைய வேலை கஷ்டம் என்று முடிவு செய்ய வேண்டியது. இருவரும் இதற்கு சம்மதித்து பிரிந்தோம். 

ஒப்பந்தம் செய்தபடி, மறுநாள் காலையே, டீபக் செய்துகொண்டிருந்த ப்ரொக்ராமின் லிஸ்டிங்கை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ரீராம் கேபினுக்கு சென்றேன். அப்பொழுது ஸ்ரீராம் போனில் இருந்தார். கையை காட்டி என்னை அமர சொன்னார். கேபினின் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டேன். 

"திருப்பூர்ல இருக்க உங்க கம்பெனிக்கு சாஃப்ட்வேர் வேணுமா?"
"ஒரு பத்து பதினஞ்சாயிரம் வேணுமா?"
"என்ன மாதிரி சாஃப்ட்வேர்?"
"எல்லா மாதிரி சாஃப்ட்வேருமா!?"
"சைஸா??" கேட்பவர் சாஃப்ட்வரை ஏதோ பனியன் அண்டர்வேர் மாதிரி நினைத்திருப்பது போல் தோன்றியது.

அப்பொழுது கறுப்பாக தாட்டியாக கடா மீசையுடன் வெள்ளை கதர் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக அடியாள் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் வந்த இரண்டு பேர் வெளியே நின்று விட்டர்கள். "ஸ்ரீராம் சார், வணக்கம்." அவரைப் பார்த்தவுடன் ஸ்ரீராம் முகம் சிறிது கறுத்துவிட்டது. "நான் உங்களை அப்புறம் கூப்பிடறேன்" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார். "வாங்க பக்கிரி, உட்காருங்க" என்றார். ஸ்ரீராமின் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்த பக்கிரி, "சார், நம்ம மேட்டர்..." என்று இழுத்து போலிப் பவ்யம் செய்தார்.

"என்ன பக்கிரி மாமூல்னா, அம்பது, நூறு கேப்பாங்க,  நீங்க லட்ச கணக்கிலே கேட்கிறீங்க. வி.பி.ட்ட சொல்லியிருக்கேன். இப்ப மீட்டிங்க்ல இருக்கார். அவர்ட்ட பேசினதும்தான் எதுவும் சொல்ல முடியும். காபி எதுவும் சாப்ட்றீங்களா?" என்று பஸ்ஸரை அழுத்தினார் ஸ்ரீராம். "ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீராம் சார். கட்சிக்காரங்களையெல்லாம் சரி கட்ட வேண்டியது இருக்கு" என்று என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தார் பக்கிரி. எனது முதுகுத் தண்டு சில்லிட்டது போலிருந்தது. 

ஸ்ரீராம் அடித்த பஸ்ஸருக்கு கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அஸிஸ்டண்ட் மேனஜர் சந்தானம். "எங்கள் டிபார்ட்மென்டில் எத்தனை பக்குகள் தெரியுமா" என்று ஸ்ரீராம் கேட்டதில் முதல் பக் இந்த சந்தானம்தான். புத்திசாலியாக இல்லாவிட்டாலும் மிகுந்த வேகமாக இருப்பான். ஸ்ரீராமை அவனுக்கு சுத்தரவாகப் பிடிக்காது. ஸ்ரீராம் ஒரு மிகப் பெரிய வேஸ்ட் என்பது அவனது அசைக்க முடியாத அபிப்ராயம். ஸ்ரீராம் போன்றவர்களை வைத்திருப்பது கம்பெனிக்கே ஒரு அவமானம் என்றும், அவனைப் போன்ற இளமையும் வேகமும் கொண்டவர்களாலேயே கம்பெனியை வெகு வேகமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது அவன் நினைப்பு. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை மட்டம் தட்டுவதும், அவரை வேலையை விட்டுத் தூக்கும் அளவிற்கு மேலதிகாரிகளிடம் தாறு மாறாக அவரைப் பற்றி குறை சொல்வதுமாக இருப்பான். பதிலுக்கு ஸ்ரீராமும் அவனிடம் எல்லாவித எடுபிடி வேலைகளை செய்ய வைத்து அவமானப்படுத்துவதும், ஹோட்டல் புக்கிங்க்,  க்ளையன்ட் என்டெர்டெயின்மென்ட் போன்ற இத்யாதி வேலைகளில் ஈடுபடுத்தி அவனை வீணடிப்பதுமாய் இருப்பார். இந்த சச்சரவு அவர்களுக்குள் வாடிக்கையாயிருந்தது.

"சந்தானம் மூன்று காபி கொண்டு வா" என்று சந்தானத்தை பணித்தார் ஸ்ரீராம். சந்தானம் அவரை மிகக் கேவலமான பார்வை ஒன்றை பார்த்துவிட்டு, கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியேறினான். "சார் நம்பளை கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்" என்று இழுத்தார் பக்கிரி. "இருங்க பக்கிரி, வி.பி.கிட்ட கேட்டுத்தான் எதையும் சொல்ல முடியும்" என்று ஸ்ரீராம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, போன் மணியடித்தது. 

"என்னம்மா சொல்றே, நடிகர் வடிவேலு வந்திருக்கிறாரா?"
"அவருக்கு இங்கே என்ன வேலை?"
"சரி சரி வரச் சொல்லு" என்று போனை வைத்தார்.

"நடிகர் வடிவேல் வந்திருக்கிறாராம். எதுக்கு என்று தெரியவில்லை" என்று என்னைப் பார்த்து சொன்னார். எல்லோரும் நடிகர் வடிவேல் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அவரை பார்பதற்கு ஆவலாய் இருந்தோம் என்று சொல்லலாம். சிறிது நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு நடிகர் வடிவேலு உள்ளே வந்தார். "டேங்க் யூ" என்று தன்னை வழியழைத்து வந்த காரியத்தரிசியிடம் சொன்னார். "யூ ஆர் வெல்கம் சார்" என்றாள் அவள் சிறிது துள்ளலுடன். பின்னர் கதவை சாத்திவிட்டு வெளி சென்றாள்.

நாங்கள் மூவரும் எழுந்து நின்றோம். "வாங்க மிஸ்டர் வடிவேல், நீங்க வந்தது எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியம். வாங்க, உட்காருங்க, உங்களுக்கு நாங்க என்ன செய்யணும்" என்று வரவேற்றார் ஸ்ரீராம். "உஸ்.... அப்பாடா" என்று வடிவேல் பக்கிரிக்கு அடுத்தபடியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார். நாங்களும் அமர்ந்துகொன்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். 

ஸ்ரீராம் பஸ்ஸரை அழுத்தி சந்தானத்திடம் இன்னுமொரு காபி கொண்டு வரச் சொன்னார். சந்தானம் பல்லை நற நறத்தபடி வெளியே சென்றான்.  பின்னர் நான்கு காபிகளாக கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான். அவன் முகம் வெறுப்பினால் சிவந்து போயிருந்தது. வெளியே டமார் டமார் என்று சந்தானம் ட்ரேயை சுவரில் அறைவது போல் சத்தம் கேட்டது. 

"பக்கிரி காபி எடுத்துக்குங்க. காபி சாப்பிடுங்க வடிவேல். சொல்லுங்க நாங்க உங்களுக்கு என்ன செய்யணும். எதுக்கு நீங்க போயி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க" என்று கேட்டார் ஸ்ரீராம்.அவர் சொல்லப் போவதை கேட்க எல்லோரும் ஆவலுடன் இருந்தோம். "வேலை கேட்டு வந்திருக்கேன் சார்" என்றார் வடிவேல். "என்னது" எல்லோரும் ஒரு சேரக் கூவிவிட்டோம், "உங்களுக்கு வேலையா?". 

"ஆமா சார். இந்த வெயிலேயும் மழைலேயும் சினிமாவுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு. நாங்க காட்டுலேயும் மேட்டுலேயும் அலைஞ்சு கஷ்டப்பட்டு சம்பாதிகிறதை இந்த ப்ரோக்ரமர்க ஏஸி ரூம்ல உக்காந்துக் கிட்டு இண்டர்நெட்டை ப்ரௌஸ் பண்ணியே சம்பாதிக்கிராய்ங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் அது மாரி வேலை கிடைக்குமான்னு பாக்கலாம்னு வந்தேன்" என்றார். எங்களுக்கு எல்லாம் சே என்றாகிவிட்டது. ஸ்ரீராமிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரும்பி என்னை பார்த்து முறைத்தார். நான் "அப்படியெல்லாம் இல்லை" என்பது போல் அவசர அவசரமாய் கையை அசைத்தேன். "சார், என்னைப் பார்த்து அனுப்பிவிடுங்க. நாலு இடம் போகணும்" என்றான் பக்கிரி. "இரு பக்கிரி" என்று அவனை அடக்கிவிட்டு, "சரி மிஸ்டர் வடிவேல். உங்களுக்கு ப்ரொக்ராம், கோடிங்க் பற்றி என்ன தெரியும்" என்றார் ஸ்ரீராம். 

அதற்குள் காரியத்தரசி ஆறேழு பெண்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள். "வடிவேல் சார், ஆட்டோக்ராஃப்" என்றார்கள். "வடிவேல் சார், காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே" என்றாள் ஒரு பெண். மற்ற பெண்கள் கலுக் கலுக் என்று சிரித்தார்கள். "கண்ணக் கட்டுதா சார்" என்றாள் இன்னொருத்தி. மறுபடியும் கலுக் கலுக் என்று சிரித்தார்கள். ஸ்ரீராம் அவர்களை "போங்கம்மா" என்று விரட்டிவிட்டார். "ஸ்ரீராம், உங்களுக்கு பொறாமை. வேணும்னா நீங்களும் அவரை மாதிரி காமெடி பண்ணுங்க" என்று சாடிவிட்டு சென்றார்கள்.

"என்ன ப்ரோக்ராம் சார். சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி எதை சொல்றீங்க. எல்லாத்திலேயும் என் ப்ரோக்ராம் வருது" என்றார் வடிவேல். "அது இல்லை..... அது வந்து...." எப்படி சொல்வது என்று யோசித்தார் ஸ்ரீராம். "அத விடுங்க சார். நீங்க சொல்லுங்க... வாழ்க்கைன்னா என்ன? சொல்லுங்க" என்றார் வடிவேல். ஸ்ரீராம் தடுமாறிவிட்டார். அவருக்கு இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லை. கேள்வி கேட்டுத்தான் பழக்கம். "சரி அத விடுங்க, இத சொல்லுங்க, வாழ்க்கையில முக்கியமானது எது?" என்றார் வடிவேல் மறுபடியும். "என்ன மிஸ்டர் வடிவேல், அத எப்படி அவ்வளவு ஈசியா சொல்ல முடியும். இடஸ் ஆல் டிபெண்ட்ஸ் ஆன் த சிட்சுவேஷன்...". ஒருவாறு சமாளித்தார் ஸ்ரீராம். வடிவேல் மறுப்பது போல் தலையசைத்தார்.

"சார்.. நம்ப விஷயம்" என்று இடை மறித்தான் பக்கிரி. "இருய்யா பக்கிரி" என்று எரிச்சலானார் ஸ்ரீராம். "வெல், மிஸ்டர் வடிவேல், இஃப் இட்ஸ ப்ராஜெக்ட் இட்ஸ் த மேனஜ்மென்ட் தட் இஸ் இம்பார்டன்ட்.  இஃப் இட்ஸ் மேனஜ்மென்ட் லையஸானிங் இஸ் இம்பார்டன்ட். இஃப் இட்ஸ ப்ரோக்ராம், த க்வாலிட்டி இஸ் இம்பார்டன்ட், இஃப் யூ ஆஸ்க் சார், ஹி வில் ஸே கைட்லைன்ஸ் இஸ் இம்பார்டன்ட்.." என்று திரும்பி என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, "ஸோ, மிஸ்டர் வடிவேல் இட்ஸ் ஆல் டிபெண்ட்ஸ் ஆன் த சிட்சுவேஷன் அன்ட் த பெர்ஸன். பட் மிஸ்டர் வடிவேல் நீங்க என்ன சொல்ல வரீங்க."

வடிவேல் அவரையே வெறித்து பார்த்தார். இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போல் தலையை அசைத்துவிட்டு, "சார்! அதெல்லாம் இல்ல. வாழ்க்கையில்ல ரொம்ப முக்கியமானது ஆத்தா சார், வாழ்க்கைன்னா ஆத்தாளை சந்தோசஷமா வச்சிகிறது!" என்றார். "ஆத்தா" என்றால் என்னவென்று ஸ்ரீராமிற்கு விளங்க சிறிது வினாடிகளாயிற்று. "ஓ! யூ மீன் மதர். ஒகே. கோ ஹெட்." என்றார்.

அதற்குள் போன் மணியடித்தது. 
"என்னது? பூர்ணம் விஸ்வநாதன் வந்திருக்காரா? அவரும் வேலை கேட்டு வந்திருக்கிறாரா?"
"ஒ! இவர் வெறும் விஸ்வநாதன். பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பாராமா! சரி சரி."
"நம்ப ப்ராஜக்ட் லீடர் சண்முகவேல் அப்பாவாமா? சரி அப்ப அனுப்பு." என்று போனை வைத்தார் ஸ்ரீராம்.

"சாரி மிஸ்டர் வடிவேல். யெஸ். ப்ளீஸ் கோ ஹெட்" என்றார் வடிவேலைப் பார்த்து. "சார்! எங்க ஆத்தா இருக்காளே... கையிலே காசு இல்லேனாலும், திருவிழாக்கு திருவிழா மஞ்ச ஐஸ் பச்ச ஐஸ் குச்சி ஐஸ்னு எல்லா ஐஸும் வாங்கித் தருவா. நீங்க எவ்வளுதான் குவாலிட்டி, மேனஜு, லைசன் போட்டாலும் ஆத்தா வாங்கித் தர அந்த குச்சி ஐஸ்ஸுக்கு ஈடாகாது" என்றார் வடிவேல். ஸ்ரீராம் தலையை சொறிந்துகொண்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் வடிவேல் முற்றிலும் ஃப்ளாஷ் பேக்குக்கு போய்விட்டார். "சார்! எங்க ஆத்தா இருக்காளே... "

இதற்குள் பக்கிரியின் பொறுமை எல்லை தாண்டிவிட்டது. சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துகொண்டு "இன்னா ஸ்ரீராமு, நானும் பார்த்துக்கினே இருந்தா, நீயும் டபாய்ச்ச்கிக்கினே கீறிய!" என்று சொல்லி, வேட்டியில் மறைத்து வைத்திருந்த பிச்சுவாவை சட்டென உருவி, ஸ்ரீராமின் முகத்திற்கு முன் காட்டி, "தோ பாரு ஸ்ரீராமு! இன்னும் ஃபைவ் நிமிட்ஸ்குள்ளாறே பத்ல் வரங்காட்டி மவனே...!" என்று சொல்லிவிட்டு, பிச்சுவாவை டேபிளில் மேல் போட்டுவிட்டு, குத்துக் காலிட்டு மறுபடியும் சேரில் உட்கார்ந்துகொண்டான் பக்கிரி. "அடி ஆத்தே!" என்று அலறி விட்டார் வடிவேல்.

ஸ்ரீராமிற்கு சிறிது பயமாகிவிட்டது. "இருங்க பக்கிரி, நான் என்ன சொல்ல வரேன்னா...." என்று சமாதானம் செய்ய முனையும்போது, விஸ்வநாதன் கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்துவிட்டார். "ஸார்! எம் பேர் விஸ்வநாதன். எம் பையன் பேர் சண்முகவேல். உங்க ஆஃபிஸ்லதான் வேலை செய்யறான். நீங்க க்யூ.ஏ.ன்னு சொல்லி, என்னென்னமோ ஃபார்ம்லாம் கொடுத்து ஃபில் பண்ண சொல்லி அவனை படுத்துறேளாம். அது விஷயமாத்தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்" என்று படபடவென்று பேசியவரை ஸ்ரீராம் கைகாட்டி நிறுத்தி "காம் டௌன் மிஸ்டர் விஸ்வநாதன், முதல்லெ உக்கருங்கோ" என்றார். 

இருக்கையில் அமர்ந்த விஸ்வநாதன் எதேச்சையாக திரும்பி, டேபிளிலிருந்த பக்கிரியின் பிச்சுவாவை பார்த்துவிட்டார். "ஐயோ! என்னதிது, பிச்சுவாவெல்லாம் வச்சிண்டிருக்கேள். நான் ஐ.ஜி. வரைக்கும் போவேனாக்கும். இந்த ஆஃபிஸ்ல பிச்சுவாவெல்லாம் வச்சு மிரட்டி வேலை வாங்குறான்னு கம்ப்ளெய்ன்ட் கொடுப்பேனாக்கும்" என்றவரை மறித்து, "ஐயோ! விஸ்வநாதன், இது ஆஃபிஸோட பிச்சுவா இல்லை, பக்கிரியோட பிச்சுவா" என்றார் ஸ்ரீராம். "யாரது பக்கிரி" என்று வினவிய விஸ்வநாதன், திரும்பி பக்கிரியை பார்த்துவிட்டு, "ஓ! ஆள்ல்லாம் வச்சுண்டிருக்கேளா! நான் சி.எம். வரைக்கும் போவேனாக்கும். இந்த ஆஃபிஸ்ல ஆள்ல்லாம் வச்சு அடிக்கிறான்னு கம்பளெய்ன்ட் பண்ணுவேன்" என்றார்.

இதற்குள் பக்கிரிக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. சட்டென்று எழுந்து, "யோ பெருசு! வந்தமா, ஆபிஸ் வேலய பார்த்தமான்னு இருக்கணும். அத வுட்டுட்டு இப்டி நீ சும்மா கூவிக்கினு இருந்தேன்னு வச்சுக்க, ஒரே வகுரு" என்று பிச்சுவாவை எடுத்து ஆக்சன் பண்ணி காட்டினான். அவ்வளவுதான் விஸ்வநாதனுக்கு முற்றிலும் ஃப்யுஸ் போனது போலாகிவிட்டது. "இல்லே பக்கிரி. இப்படியெல்லாம் ஒரு ஆஃபிஸ்ல பிச்சுவாவைக் காட்டி மிரட்டுறது சரியில்லை. அதத்தான் சொல்ல வந்தேன்...." என்று இழுத்த விஸ்வநாதனை கைகாட்டி அமர்த்திய ஸ்ரீராம் "ரிலாக்ஸ் மிஸ்டர் விஸ்வநாதன்" என்று ஆசுவாசப் படுத்தி, " காபி சாப்பிடறேளா" என்று கேட்டார்.

பஸ்ஸரை அழுத்தி சந்தானத்தை வரவழைத்தார். "சந்தானம், இன்னுமொரு காபி. அப்படியே எல்லோருக்கும் சேன்ட்விச் கொண்டு வந்துவிடு" என்றார். சந்தானம் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு, முகம் அஷ்டகோணலாக, வலிப்பு வந்தார் போல் கையையும் காலையும் இழுத்துக்கொண்டு வெளியே சென்று கதவை டமாரென்று சாத்தினான். டமாரென்று மறுபடியும் ஒரு சத்தம் கேட்டது. அது சந்தானம் கதவை கையால் ஓங்கிக் குத்திய சத்தம் போல் இருந்தது.

மறுபடியும் ஆளுக்காள் பேச எத்தனித்தபோது, ஸ்ரீராம் எல்லோரையும் கைகாட்டி அமர்த்தினார். எல்லோரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொண்டனர். "சாரி ஃபார் த இன்ட்ரப்ஷன். மிஸ்டர் வடிவேல், இப்ப சொல்லுங்க" என்றார் ஸ்ரீராம். "இல்லெ சார். எனக்கு ரொம்ப கண்ணைக் கட்டுது." என்று அமைதியாகிவிட்டார் வடிவேல். "சாரி மிஸ்டர் வடிவேல் நீங்க வந்த அன்னைக்கு பார்த்து இப்படி ஆகிவிட்டது" என்று வடிவேலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ஸ்ரீராம். 

விஸ்வநாதன் பக்கம் திரும்பி "சொல்லுங்க விஸ்வநாதன் உங்க பையனுக்கு என்ன பிரச்சினை" என்றார். "சார் நீங்க க்யூ.ஏ.ன்னு சொல்லி கண்ட கண்ட ஃபார்மெல்லாம் கொடுத்து அவனை படுத்துறேளாம். வீட்ல வந்து ஓன்னு அழறான்." என்றார் விஸ்வநாதன். "இது என்ன மிஸ்டர் விஸ்வநாதன், உங்க பையன் இங்க பெரிய ப்ராஜக்ட் லீடர். சின்னப் பையன் மாதிரி அழுகிறார்ன்றீங்க. நம்ப முடியல்லே. இருந்தாலும் க்யூ.ஏ. பத்தியெல்லாம் என்னால ஒன்னும் செய்ய முடியாது." என்றார் ஸ்ரீராம். "சார் அப்படியெல்லாம் சொல்லதீங்கோ, . என் பையனை இப்படிப் படுத்தாதீங்கோ. அவனை வாழ விடுங்கோ. அவன் பேக் க்ரௌண்ட் தெரிஞ்சா இப்படியெல்லாம் செய்ய மாட்டேள். அவன் ஸ்ட்ரீட் லேம்ப்ல படிச்சு வந்தவனாக்கும்." என்றார். "ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாரா" என்றார் ஸ்ரீராம் சிறிது நக்கலாக. 

இதற்குள் விஸ்வநாதன் மேல் பெரிதும் இரக்கப் பட்டு, பக்கிரி, பிச்சுவாவை எடுத்துக் கொண்டு கட்ட பஞ்சாயத்துக்குத் தயரானான். " இன்னா ஸ்ரீராம், பெர்சு இவ்ள தபா கேக்குதில்ல. அதின்னா ஃபார்மு, அதில்லாம் ஃபில் பண்ண வேண்டான்னு சொல்லிடு" என்றான். உடனே படபடப்பானார் விஸ்வநாதன், "நீங்க சொல்லுங்கோ பக்கிரி, நீங்க சொன்னா கேப்பா. எப்படியெல்லாம் ஃபார்ம் கொடுக்குறா தெரியுமா?" என்று ஆரம்பித்தவரை "உஷ்" என்று அடக்கினான் பக்கிரி. "பக்கிரி! அதெல்லாம் சொல்ல முடியாது. க்ளையன்ட்ஸ் கேப்பாங்க" என்றார் ஸ்ரீராம். "அதி யாரு கிளயன்ட்ஸ்.  நம்ப கையிலே போன் போட்டு பேசச் சொல்லு. நா பேசுரேன்." என்றான் பக்கிரி. "இதப் பார் பக்கிரி உனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாம் நீ தலையிடாதே" என்று கறாராகச் சொன்னார் ஸ்ரீராம்.

"கேளு, கேளு பக்கிரி, எனக்கே இந்த பெரியவரைப் பார்த்தா பாவமா இருக்கு" என்றார் வடிவேல். "இவரைப் பார்த்தா எங்க ஆத்தா போலவே இருக்கு. அதே மாரி பாசம், பெத்த பிள்ளை மேல... எங்க ஆத்தா இருக்காளே... ஆடு வளத்தா.. கோழி வளத்தா... காடை கௌதாரி எல்லாம் வளத்தா... எல்லாத்தையும் எனக்குத்தான் பக்கிரி ஆக்கிப் போட்டா... எங்க ஆத்தா மாரி வராது..."  என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் வடிவேல். "ஐய! இதின்னடா ரோதன. இது பாரு வடிவேலு, துட்டு வர்லைனு மேலிடத்துல ஒரே ப்ரஸ்ஸரா கீது, நா அது பத்தி ரோசிச்சுக்கினு கீறேன். நீ இன்னாடான்னா ஒன் ஆத்தா கதியப் பத்தி பேசிக்கினு கீற. செத்த கம்னு இரு.." என்றான் பக்கிரி வெறுப்பாக. 

இதற்கிடையில் சந்தானம் காபியும் சேன்ட்விச்சும் கொண்டு வைத்துவிட்டுப் போனான்.  "த, கஸ்மாலம்" என்றான் பக்கிரி. "ஆத்தை" என்று கத்தினார் வடிவேல் ."படுபாவி, நீ நல்லா இருப்பியாடா" என்று திட்டினார் விஸ்வநாதன். சந்தானந்தான் எல்லோர் காலையும் வரிசையாக மிதித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் எல்லோரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். 

இடையில் பக்கிரியின் செல் போன் அடித்தது. "சரி சார்", "ஒகே சார்", சரி சார்", என்றவாறு இரண்டு நிமிஷம் பேசினான். வேலையை முடிக்குமாறு மேலிடத்தில் உத்தரவு வந்திருக்கும் போலுள்ளது. போன் கால் முடிந்தவுடன் சட்டென்று எழுந்தான் பக்கிரி. பிச்சுவாவை எடுத்து டேபிள் மேல் ஒரு கீறு கீறிவிட்டு கையில் எடுத்துக்கொண்டான். ஸ்ரீராம் இருக்கைக்கு அருகில் வந்து அவர் கழுத்தில் பிச்சுவாவை வைத்து "இத பாரு ஸ்ரீராம் கண்ணு, மருவாதியா விபிக்கு போன் போட்டு துட்டெடுத்து வக்கிற வழியப் பாரு, இல்லங்காட்டி, உம் பொண்டாட்டி புள்ளிங்கள பாக்க இன்னிக்கு வூடு போய் சேர மாட்ட, அப்பால நான் ஜவாப்தாரியில்ல" என்றான்.

"இத பாருங்க பக்கிரி,  இதெல்லாம் செய்யகூடாது. ஒரு டீஸன்டான ஆஃபிஸரை இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது. இதெல்லாம் சரியில்லை, நான் போலிஸுக்கு போவேனாக்கும், போலிஸ் போலிஸ்" என்று கத்தினார். விஸ்வநாதன். "ஸ்..! அப்பா! கண்ணைக் கட்டுதே!" என்று மயங்கிவிட்டார் வடிவேல். நான் ஸ்ரீராம் என்ன செய்யப் போகிறார் என்று எதிர் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீராம் அமைதியாக, "பக்கிரி, வி.பி.க்கு போன் போட்றேன். முதல்ல நீ சீட்டுல போய் உட்கார்" என்று போனை எடுத்தார். பக்கிரி இருக்கைக்கு சென்று அமர்ந்து பிச்சுவாவை மறுபடியும் டேபிளின் மேல் வைத்தான். போனில் பேசிய ஸ்ரீராம், "பக்கிரி, விபியோட செகரட்டரிக்கிட்ட சொல்லியிருக்கேன், இன்னும் பத்து நிமிஷத்தில கூப்பிட்றேன்னு சொல்லியிருக்கார். அது வரைக்கும் பொறுமையா இரு" என்றார்.

"எதுக்கு பக்கிரிக்கு துட்டெல்லாம் கொடுக்கறேள். எதும் பேமெண்ட் பாக்கி இருக்கா. இப்படி மிரட்டுனாத்தான் கொடுப்பேளா..." என்று ஆரம்பித்த விஸ்வனாதனை கைகாட்டி அமர்த்தினார் ஸ்ரீராம். "மிஸ்டர் வடிவேல் எழுந்திருங்கோ! ஸ்ரீராம் பேமென்ட் கொடுக்க ஒத்துண்டார். ஒன்னும் ஆவாது" என்று வடிவேலை எழுப்பினார் விஸ்வநாதன். "விஸ்வநாதன், சித்த சும்மா இருக்கேளா. இது ஒன்னும் பேமென்ட் இல்ல. மாமூலாக்கும்" என்றார் ஸ்ரீராம் சற்று எரிச்சலுடன். "மாமூலா? அய்யோ ராமா! கலிகாலம் முத்திடுத்து.." என்று அரற்றினார் விஸ்வநாதன். "பக்கிரி, நீ என் கழுத்தில கத்தியை வக்கிறதுக்குப் பதிலா அவர் கழுத்தில வச்சிருக்கலாம்" என்றார் ஸ்ரீராம் எரிச்சல் தணியாதவராக. பக்கிரிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவர்கள் தனக்கு பயப்படுகிறார்களா, இல்லை தன்னை கேலி செய்கிறார்களா என்று அவனுக்குப் புரியவில்லை.

ஸ்ரீராம் இருந்த இடைவெளியில் டேபிளை க்ளீன் பண்ணூம் பொருட்டு கப், ப்ளேட்டுகளை எடுத்துப் போக சந்தானத்துக்கு பஸ்ஸரை அழுத்தினார். சந்தானம் வெகு வேகமாக உள்ளே வந்தான், வந்த வேகத்தில் என் சேரின் மேல் தடுக்கி விழுந்தான். அவன் முகம் கோணி வாய் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது. தடுமாறி எழுந்துகொண்டு சைகையில் ஏதேதோ சொல்லி டேபிளில் ஓங்கி ஓங்கி குத்தினான். ஸ்ரீராமை அடிக்கப் போவது போல் பல விதங்களில் பாவனை செய்தான். "ஆத்தே! இது என்னது!" என்றார் வடிவேல். "வடிவேல், நீங்க மறுபடியும் மயங்கிடாதீங்கோ. இது இவாளுக்குள்ளே எப்பவும் நடக்கிற சண்டை போலேயிருக்கு" என்று வடிவேலை சமாதனப் படுத்தினார் விஸ்வநாதன். 

சந்தானத்திற்கு டேபிளிலிருந்த பக்கிரியின் பிச்சுவா கண்ணீல் பட்டது. சட்டென்று அதை கையில் எடுத்துக்கொண்டான். யாரும் அருகில் வராதீர்கள் என்பது போல் சைகை செய்துவிட்டு, பிச்சுவாவைக் காற்றில் இங்கும் அங்கும் சுழற்றி, அறையில் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தான். ஸ்ரீராமை பிச்சுவாவால் குத்தப் போவது போல் பாவனை செய்துவிட்டு, அவர் முன்னால் டேபிளில் ஓங்கி ஓங்கி பிச்சுவாவால் குத்தினான். "கிர்ர்ர்..", "கிர்ர்ர்,,:" என்று டேபிளில் குறுக்கும் நெடுக்குமாகக் கீறினான். பின்னர் பிச்சுவாவை டேபிளில் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, காலை விந்தி விந்தி வைத்து, யாரும் கிட்டே வரக் கூடாது என்பது போல் செய்கை செய்துகொண்டே பின் நடையா நடந்து, கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான். பின்னர் யாரோ கீழே விழுந்தது போல் சத்தம் கேட்டது. சந்தானந்தான் மயங்கி கீழே விழுந்திருக்க வேண்டும்.

சந்தானம் பிச்சுவாவை எடுத்து வீசிகொண்டிருக்கும்போதே நாங்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களில் பதுங்க ஆரம்பித்து விட்டோம். நான் என் சேருக்கடியில் ஒளிந்துகொண்டேன். வடிவேலும், விஸ்வநாதனும் அவர்கள் சேருக்கடியில் ஒளிந்துகொண்டார்கள். ஸ்ரீராம் பத்திரமாக டேபிளுக்கடியில் பதுங்கிக் கொண்டார். சந்தானம் போன பின் அவரவர் பதுங்கிய இடத்திலிருந்து வெளியே வந்து. சேர்களில் மெதுவாக உட்கார்ந்தோம். யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்ல. பக்கிரியை அவன் சேரில் காணவில்லை. அவன் வெகு தீவிரமாக அங்கிருந்த ஃபைல் கேபின் மேல் ஏற முனைந்து கொண்டிருந்தான். பயத்தில் அவன் சந்தானம் வெளியே போய்விட்டதைக் கூட கவனிக்கவில்லை. அவனை பிடித்து கீழே இறக்கி அவன் சேரில் உட்கார வைத்து ஆசுவாசப் படுத்தினோம். அவன் முகம் பயத்தில் வெளிறியிருந்தது. உடல் லேசாக நடுங்கியது. மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தான். 

"என்ன பக்கிரி, பயந்துட்டியாடா?" என்றார் விஸ்வநாதன். பக்கிரி பின்னர் கொஞ்சம் சுதாரித்தவனாய்  "அப்ப ஸ்ரீராமு, அப்பாலே நான் வரேன், நீ எதுக்கும் ரோசிச்சு வெய்" என்று சொல்லிவிட்டு பிச்சுவாவை இடுப்பில் சொருகிக் கொண்டு பந்தாவாக வெளியில் செல்ல எத்தனித்தான். "பார்த்துப் போடா பக்கிரி" என்று விஸ்வநாதன் போகிற போக்கில் அவனைக் கடுப்பு ஏத்தினார். "என்ன பக்கிரி ஒம் பிச்சுவா காய்கறியாவது ஒழுங்கா வெட்டுமா" என்றார் ஸ்ரீராம். இதை எதும் காதில் போட்டுக் கொள்ளாதது போல் ஜம்பமாக வெளியில் சென்றான். "இன்னா அன்னாத்தே, கலெக்சன் ஆச்சா!" என்று அவன் அடியாட்கள் கேட்டனர். "கொஞ்சம் டைம் கேக்குறாங்க மாமு!" என்றான் பக்கிரி. "பெரீய கம்பெனில கொஞ்சம் டைம் ஆவும்" என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சென்றுவிட்டார்கள். "பேமானி, இப்பக் கூட அவன் வெட்டிச் சவடால் குறையுதா பாருங்கோ" என்று திட்டினார் விஸ்வநாதன். "உண்மையிலய கண்ணைக் கட்டுதே" என்று சேரில் சாய்ந்தார் வடிவேல். 

அப்பொழுது போன் மணி அடித்தது.  ஸ்ரீராம் போனை எடுத்தார். 
"என்னது சாஃப்ட்வேர் சாஃப்ட்டா இருக்குமாவா". 
திருப்பூர் பார்ட்டிதான் மறுபடியும் கூப்பிடுகிறார் போலிருக்கிறது.
"அது எப்படி சார் சாஃப்ட்வேர் சாஃப்ட்டா இருக்கும்."
"இது சாஃப்ட்வேர் சார். ப்ரோக்ராம்ஸ். உங்களுக்கு என்ன வேணும்."
"பிசினெஸ் டல்லாகிப் போச்சு. புது ப்ராடக்ட் விடலாம்னு பார்க்கிறீங்களா. என்ன பிசினெஸ் பண்றீங்க?"
"பனியன், அண்டர்வேரா? இது சாஃப்ட்வேர்ங்க, பனியன் அண்டர்வேர் மாரில்லாம் வராது."
"ஆமாம்மா, அது மாரி உடுத்தெல்லாம் முடியாது."
"அப்புறம் எதுக்கு பண்றோங்க்றதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். வைங்க போனை." என்று ஸ்ரீராம் கோபாமாக போனை கட் பண்ணிணார்.

நான் எழுந்துகொண்டுவிட்டேன்.  "நான் வரேன் ஸ்ரீராம். வேலையிருக்கிறது" என்றபடி வெளியில் நடக்க ஆரம்பித்தேன். வடிவேலு அயர்ந்து போய் தூங்கிவிட்டிருந்தார். விஸ்வநாதன் பையனுக்கு க்யூ.ஏ. ஃபார்ம் கொடுக்க வேண்டாமென்று மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தார். வெளியே சந்தானம் தலையை சுவற்றில் மோதியவாறு மயங்கிக் கிடந்தான். ஆஃபிஸுக்கு வெளியில் பக்கிரி தன் சகாக்களிடம் இந்த பக்க்ம் கையை காட்டி ஏதோ ஆக்ரோஷமாக சொல்லிக் கொண்டிருந்தது ஜன்னல் வழியாகத் தெரிந்தது. 

ஸ்ரீராம் கேபினை விட்டு வெளியே வந்து, என் பின்னாடியே வந்தார். "என்ன சார்.அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க. இன்னும் லஞ்ச் ப்ரேக்கூட ஆகலியே" என்றார். "போதும் ஸ்ரீராம். இதுக்கு மேல தாங்காது." என்றேன். "அப்ப ஒத்துக்குறீங்களா எங்க வேலை கஷ்டம்ன்னு." என்று கேட்டார். நான் ஒரு மாதிரியாய் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன். 





எச்.ஆர்.டியில் ஒரு காலா 2, ஜனவரி 27


எச்.ஆர்.டியில் ஒரு காலா 2

யாருடைய வேலை கஷ்டம் என்பதில் எனக்கு இன்னும் இரு விதமான கருத்து இருந்தது. எச்.ஆர்.டியின் கஷ்டங்களை பார்த்த பின்னும் எங்கள் வேலை சுலபம் என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை. ISO சர்டிஃபிகேஷன், ப்ரோக்ராம் ஃபால்ட், டெட்லைன், க்ளையன்ட் ஸேடிஸ்ஃபேக்ஷன் என்று எங்கள் பக்க பிரசினைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும் புதிதாக ஒன்று விளங்கியது. ஸ்ரீராம் கேபினில் நடந்தது ஒரு பயங்கரமான கார்ட்டூன் படம் போல இருந்தாலும், எனக்கு ஏனோ ஒரு விதத்தில் அர்த்தமாகப் பட்டது. 

ஒரு சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் முடிந்து க்ளெயண்ட் டெலிவரிக்குப் பின்னர். ஒரு வெறுமையையும், அர்த்தமற்ற தனத்தையும் உணர்வேன். இதற்கு முந்தைய ப்ராஜக்ட் ஒரு பேங்கிங்க் சிஸ்டம். இம்ப்ளிமெண்ட் ஆகி ஒரு மாதத்திற்குப் பிறகு சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க சென்றிருந்தோம். அங்கிருந்த க்ளர்க் என் கையைப் பிடித்துக்கொண்டார். "பிரமாதம் சார்! எல்லாம் ஹெட் ஆஃபிஸ் பார்த்துக்குவாங்க. வர ட்ரான்ஸேக்ஷனை என்டர் பண்ணி அனுப்புறதுதான் எங்க வேலை." என்றார். 

அதற்கு முந்தையது ஒரு ரீடெய்லிங்க் சிஸ்டம். இம்ப்ளிமெண்டேஷன் ரெவியூவிற்கு போயிருந்தபோது அந்த கம்பெனியின் ஜிஎம் ஏகத்துக்குப் பாராட்டினார். "எக்ஸலன்ட் சார். டெய்லி ரீடெய்ல்ஸெல்லாம் டேலி பண்ணி காலைல இன்வெண்டரி, பர்சேஸ் லிஸ்ட் எல்லாம் கொடுத்துறுது. என்ன லிஸ்டுன்னுகூட பார்க்க தேவையில்லை. அப்படியே பர்சேஸ் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பிட்டா, அவுங்க லிஸ்ட்படி வாங்கி ரிடெய்ல்ஸுக்கு அனுப்பிராங்க. ரொம்ப ஸ்மூத் சார். இதுனால இன்வெண்டரிகூட ரொம்ப குறைஞ்சு போச்சு. எக்ஸலன்ட். எக்ஸலன்ட்." என்றார்.

யாரும் இந்த ப்ராஸஸில் அந்தந்த தொழிலின் தன்மையை இழந்துவிடுவதை உணரவில்லை. பேங்க் க்ளர்க் வாடிக்கையாளர்களின் செக்கை வாங்கி, உடனேயே அவரது லெட்ஜர் பக்கத்தில் எண்ட்ரிப் போட்டு, அவருடைய பேலன்ஸ் பார்த்து, அவர் எத்தகைய கஸ்டமர், எவ்வளவு பண வரத்து வைத்திருக்கிறார் என்று ஒவ்வொரு கஸ்டமரையும் எடையிட்டு வைத்துக்கொள்ளும் வங்கியின் ஆதார செய்கையை மறந்துவிடுகிறார். அது போல் பல்பொருள் அங்காடி மேனஜர் எவ்வளவு சரக்கு விற்றிருக்கிறது, எவ்வளவு சரக்கு வாங்க வேண்டும் என்று கணக்கிட்டு அங்காடியின் அன்றாட வியாபாரத் துடிப்பை உணர்வதை எளிதில் விட்டு விடுகிறார். அவர்கள் சாஃப்ட்வேர் சிஸ்டத்தின் ட்ரெண்டிலும் பளபளப்பிலும் மயங்கி, சிஸ்டத்தினால் வரும் வசதி பெருக்கத்தையும், அதனால் ஏற்படும் கூடுதல் லாபத்தையும், குறைந்த செலவையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இம்ப்ளிமெண்ட் பண்ணும் சாஃப்ட்வேர் கம்பனிகள் இம்ப்ளிமெண்ட் செய்யப்படும் சிஸ்டத்தின் தொழில் தன்மை குறையாமல் சிஸ்டம் டிசைன் செய்யலாம் என்றால், அவர்கள் கம்ப்யூட்டர் செய்யும் சாகஸங்களில் மெய்மறந்து, அவற்றின் போக்கிலேயே சாஃப்ட்வேர் செய்து, அடிப்படையான வியாபரத்தன்மையைக் குறைத்துவிடுகின்றனர். இந்த கருத்தை மேனஜ்மெண்ட் முன் வைத்தாலும், இத்தகைய கருத்து எழுதும் சிஸ்டத்தை ஸ்லோ டௌன் பண்ணும் என்பதாலும், கம்ப்யூடர் மற்றும் சாஃப்ட்வேரின் முழு ஆற்றலை பயன்படுத்தாது என்பதனாலும், அதனால் அவர்கள் பிசினெஸ் பாதிக்கப் படும் என்பதாலும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இல்லையெனில், "திஸ் இஸ நியூ ஆர்டர். யு பெட்டர் நாட் இன்டர்ஃபியர்" என்று சொல்லி விடுவார்கள். என்ன ஆர்டர் என்று அறுதியிட்டு கூறமாட்டார்கள். ஒவ்வொரு இம்ப்ளிமெண்டேஷனுக்குப் பிறகும், அந்த இடத்தின் உணர்வுத் தன்மையைக் குறைத்து லாபம் பண்ணுவது போன்ற ஒரு கணக்கிடும் தன்மையை உயர்த்தி வைத்து விடுவதால், ஒரு குற்ற உணர்வும் மன வெறுமையும் ஏற்படும். இந்த சூழ்நிலையில் ஸ்ரீராம் கேபினில் நடந்த சம்பவங்கள் புத்துணர்வாகவும், மனத்துக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தன. 

The ideas mentioned here on the computer system, mentioned in the last four five paragraphs, should not be attributed to be my ideas. Since this is a fictitious story, I took an independent thinking, but a credible thinking anyway. None the less, this need not be my thinking on computers. I would rather do as per the practices of the industry, and try to mellow down the overwhelming characteristics of the computers, in the flow. In reality even that may be difficult to do. The form of implementations usually depends on the computer companies, regulating authorities and the client companies. We just have to go with it. Unfortunately they do reasonably well in the West, but our implementations sorely lack control and almost trace to the descriptions mentioned above. 

Some descriptions in the earlier part of the story on the software industry may not be accurate even be inapplicable in today's Industry's state of affair. As this story was conceived way back in 2000 which was the beginning of all this ISO Certifications. Character dissection of software development was an issue with these certifications. Now it, the processes of development in compliant, should have been brought under control. 

BUT, the descriptions given in the end part of the story, is even more true now more than in 2000.